தீவிரமான சர்ச்சைகளில், சமயங்களில் அமீரகத்து நண்பர்கள் தனிப்பட்ட
முறையில் எழுதினாலும், அமீரகத்துக் கவலைகளையும், அமீரகத்து
யதார்த்தங்களையும் வெளிப்படுத்தும் விதத்தில் யாரும் யோசித்ததில்லை.. சில வேளைகளில், சில சமயங்களில் மட்டுமே எழுதுவதையும்
அமீரகத்து நண்பர்கள் கொண்டிருந்தனர்..திடீரென எட்டிப் பார்த்து
எதையாவது சொல்லி விட்டு மறைந்து விடுவது அமீரக நண்பர்களின்
வாடிக்கையாகிக் கொண்டிருந்த வேளையில்தான், எங்கேயோ கொழுத்திய
திரி பற்றிக் கொண்டது போல யாருக்கோ எழுதிய மடலுக்குப்
பதிலளிக்கையில், நண்பர் சுலைமான் "நீங்களெல்லாம் ஏன் நேரில்
சந்தித்துப் பேசிக் கொள்ளக் கூடாது?" என்றொரு கேள்வியை எழுப்பியிருந்தார்..
சுலபமான இந்தக் கேள்விக்கு விடை கடினமாகவே இருந்தது என்பதுதான்
விந்தை.. ஏன் இந்தச் சின்ன தேசத்துக்குள் குடியிருந்தும் ஒரு தொலைபேசி
தூரத்தில் இருந்தும் ஒருவரையொருவர் அழைத்துப் பேசவில்லை? என்பதை
நினைக்கும்போது வெட்கமாகத்தான் இருக்கிறது.. இந்த நிலையிலிருந்து மீண்டு
வர என்ன செய்யலாம் என்றெண்ணியிருந்தபோதுதான் அமுது ஒரு அஞ்சல்
அனுப்பியிருந்தார்..
அமீரகத்தில் வசிக்கும் அனைத்துத் தமிழ் இணைய அன்பர்களும் சந்தித்துப்
பேச முடிவெடுத்திருப்பதாகவும் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுத்திருந்தார்
அமுது.. இந்த அழைப்பு ஆரம்பத்தில் செவிடன் காதில் ஊதிய சங்கு போல
கண்டுகொள்ளப் படாமல் இருந்தாலும், சிறிது கால அவகாசத்தில் ஆர்வமுள்ள
10 பேர் தங்கள் பெயர்களை அமுதுக்கு அனுப்பியதன் பேரில் 20ஆம் தேதி
சனவரித் திங்கள் வியாழன் மாலையில் ஒரு புதிய அத்தியாயத்திற்கு
அடிக்கல் இடப்பட்டது..
வெறும் அறிமுகக் கூட்டம் என்று சொல்லப்பட்ட இந்தக் கூட்டத்தில் கலந்து
கொண்டவர்களில் பெரும்பாலோனோர் இளைஞர்கள் என்பதால் முதல் கூட்டமே
உற்சாகம் தழும்பியதாக அமைந்தது. .என்னென்ன செய்யலாம், எப்படியெப்படி
இயங்கலாம் என்று ஆர்வம் பொங்கிய திட்டங்கள்.. வானமே எல்லை என்று
உணர்ச்சியும், உற்சாகமும் பொங்கி வழிந்த இந்த முதல் கூட்டத்தின் போதுதான்
அமீரகத் தமிழ் இணைய நண்பர்கள் துபாயை மையமாக வைத்து தமிழ்
இணையத்தின் மேன்மைக்காக ஒன்றிணைந்து செயல்படுவது என்று
தீர்மானமாயிற்றூ..
அமீரகத் தமிழ் இணைய நண்பர்களின் துபாய் அமைப்பு.. தமிழ் இணையத்தின்
துபாய் கிளை என்பதல்ல இதன் பொருள்.. தமிழ் இணையம் உலகளாவிய
தமிழர்களின் அமைப்பு.. இந்த அமைப்பைப் பலப்படுத்துவதற்காக, இந்த அமைப்பை
தமிழர்களிடம் - குறிப்பாக அமீரகத் தமிழர்களிடம் எடுத்துச் சொல்லி இன்னும்
ஏராளமான தமிழர்களை தமிழ் இணையத்தில் இணையச் செய்வதற்காக, தமிழ்
மென்பொருட்களையும், தமிழில் மின்னஞ்சல் போன்ற தொழில் நுட்பங்களையும்
அமீரகத் தமிழர்களிடம் எடுத்துச் சொல்வதற்காக அமீரகத்தில் வாழும் தமிழ்
இணைய நண்பர்கள் தன்னார்வம் கொண்டு ஏற்படுத்தியிருக்கும் அமைப்புதான்
இது.. தமிழ் இணையத்திற்கு அமீரகத்திலிருந்து எழுதும் எவரும் இதில்
அங்கத்தினராவதில் தடையேதுமில்லை.
தமிழை , தமிழோடிணைந்த தொழில் நுட்பங்களை, அது பற்றிய விழிப்புணர்வை
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏற்படுத்துவதற்காக, தமிழ் இணையத்தினால் ஒன்றுபட்ட
தமிழ் நெஞ்சங்கள் கூடி உருவாக்கியதுதான் ஐக்கிய அரபு அமீரகத் தமிழ்
இணைய நண்பர்கள் அமைப்பு.. இந்த நோக்கில்தான் எமது பயணத்தைத்
துவங்கியிருக்கிறோம்..
ஆரம்பத்தில் இணையம் சார்ந்ததாகவே இயங்கி வந்த அமைப்பு, பின்னர் துபாயில் நடக்கும்
சமூக அக்கறையுள்ள விசயங்களிலும் ஆர்வம் காட்டத்துவங்கியதன் விளைவாகவும், திட்டமிட்டு
தங்களது விழாக்களை நேர்த்தியாக நடத்துவதன் மூலமாகவும், முழுக்க முழுக்கத் தமிழிலேயே பேசி
விழா நடத்துகின்ற தமிழ் அமைப்பு என்ற நற்பெய்ரை வெகு விரைவிலேயே சம்பாதித்ததாலும்
இன்றைக்கு துபாயில் மட்டுமல்லாமல் - அமீரகத்திலும் மிகப் பரவலாக அறியப்படுகின்ற அமைப்பாக
உருவாகியிருக்கிறது என்பது பெருமைக்குரிய செய்தி.
இந்த அமைப்பின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகிப்பவர்கள் எவ்விதப் பலனுமின்றி அமைப்பில்
கலந்து கொண்டு தங்களது உழைப்பையும், நேரத்தையும் செலவிடும் தன்னார்வத் தொண்டர்கள்தாம்.
தமிழ் இணைய நண்பர்களின் ஆதரவோடும், தமிழ் கூறும் நல்லுலகத்தின்
ஆசிகளோடும் எமது பயணத்தின் இலக்கை அடைவோம் என்ற நம்பிக்கையில்
எங்கள் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறோம்..
|